×

பொதுச்செயலாளர் அங்கீகாரம் எடப்பாடிக்கு கிடைக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் உயர்நிலை குழு பரிசீலிக்கிறது

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த 10 நாள் கெடு வரும் வெள்ளிக்கிழமை முடிவடைய உள்ளது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பாரா அல்லது தேர்தல் ஆணையத்தால் நிராகரிப்படுவாரா என்பது தெரியவரும். அதிமுகவில் கிட்டதட்ட கடந்த ஒரு ஆண்டாக ஒற்றை தலைமை சிக்கல் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.

இந்த நிலையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ஓ.பி.எஸ் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், அதேப்போன்று கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இரண்டு ரிட் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்து நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஏப்ரல் 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைகிறது.

இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் பங்கேற்பார்கள். இதையடுத்து அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா, கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தம் செல்லுமா, குறிப்பாக கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் கூட்டம் நடத்தியது ஏற்கப்படுமா ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக ஏற்கப்படுவாரா அல்லது நிராகரிக்கப்படுவாரா என்பது தெரியவரும்.

  • அங்கீகரிக்கக் கூடாது: ஓபிஎஸ் மனு
    இதுபோன்ற சூழலில் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். அதில், ‘‘அதிமுகவின் பொதுச்செயலாளர் விவகாரத்தை பொருத்தவரையில் அதுசார்ந்த சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது. அதேப்போன்று திருத்தப்பட்ட கட்சி விதிகளையும் ஆணையம் ஏற்க கூடாது. இதில் குறிப்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது வரையில் நான் தான் நீடித்து வருகிறேன்.

ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமலும், கலந்து ஆலோசிக்காமலும் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட அதிகாரத்தில் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேப்போல் அதிமுக ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்யக்கோரியும், அதிமுகவின் பழைய விதிகளின் படி பொதுச்செயலாளர் பதவி தேர்தலை நடத்தக்கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கே.சி.பழனிசாமி நேற்று வாபஸ் பெற்றார்’’ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post பொதுச்செயலாளர் அங்கீகாரம் எடப்பாடிக்கு கிடைக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் உயர்நிலை குழு பரிசீலிக்கிறது appeared first on Dinakaran.

Tags : Edappadi ,EC ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,New Delhi ,Delhi High Court ,Election Commission ,AIADMK ,General ,Dinakaran ,
× RELATED நோட்டாவுக்கு 50% ஓட்டு விழுந்தால்...